கோழிப்பண்ணைகளில் குறிப்பாக கூண்டில் முறையில் வளர்க்கப்படும் முட்டை கோழிப்பண்ணைகளில் ஈக்களின் தொல்லை சமீப காலமாக மிகவும் அதிகமாக காணப்படுகிறது. பல வகையான நோய்க்கிருமிகளை, காக்ஸிடியோசிஸ் மற்றும் நாடாப்புழுக்கள் ஈக்களின் மூலமாக கோழிகளுக்கு பரவுகிறது. மேலும், ஈக்களின் எச்சம் மற்றும் உமிழ்நீர் கம்பி மற்றும் பெயின்ட் முதலியவற்றை அரிக்கும் தன்மையுடையதால், கூண்டுகள் துருப்படித்து ஒடிந்துவிட வாய்ப்புள்ளது. ஈக்கள் முட்டைகள் மீது எச்சம் மற்றும் உமிழ்நீரை விடுவதால், முட்டைகள் அழுக்காகி அதன் தோற்றமே பாதிக்கப்படுகிறது. அதனால் முட்டைகளை விற்பனை செய்வதற்கு முன் சுத்தம் செய்ய வேண்டியுள்ளதால், முட்டையின் உற்பத்தி செலவு அதிகமாக வாய்ப்புள்ளது. அதனால் இந்தக் கட்டுரையில் கோழிப்பண்ணைகளில் ஈக்களை கட்டுப்படுத்துவதற்கான சில ஆலோசனைகள் கொடுக்கப்படுகிறது.
பண்ணை பராமரிப்பு
1. கோழிப்பண்ணைகளில் கூண்டிற்கு அதியில் குவிந்து கிடக்கும் கோழி எச்சம் ஈக்களின் இனப்பெருக்கத்திற்கு முக்கிய காரசமாக இருப்பதால் அவைகளை அதிகம் குவியவிடாமல் மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாத த்திற்கு ஒரு முறை அகற்றுவதன் மூலம் ஈக்களின் எண்ணிக்கையை பெருளவில் குறைத்துவிடலாம். அவ்வாறு அகற்றும் போது முழுமையாக அகற்றிவிடாமல் ஆங்காங்கே சிறிதளவு எச்சத்தை விட்டுவிட வேண்டும். ஏனென்றால் அவை ஈக்களின் இயற்கை எதிர் உயிரி பெருக வாய்ப்பளித்து ஈக்களை கட்டுப்படுத்த உதவுகின்றன.
2. பெரும்பாலும் ஈக்களின் எண்ணிக்கை மழை பெய்து கொஞ்ச நாட்கள் கழித்து மிகவும் அதிகமாக காணப்படும்.அதனால் கோழி எச்சங்களை கோடை மழை மற்றும் கால மழை ஆரம்பிப்பதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பே அகற்றுவதன் மூலம் ஈக்களை கட்டுப்படுத்தலாம். அகற்றப்பட்ட எச்சங்களை பண்ணையிலிருந்து சற்று தொலைவில் குவித்து வைக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் ஈக்களின் முட்டை மற்றும் வளர் பருவங்கள் வெப்பத்தினால் அழிந்துவிடும்.
3. மேலும், பண்ணைகளில் தண்ணீர் ஒழுகுவதை தவிர்க்க வேண்டும். உடைந்த முட்டைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். அதே போல் தீவனங்கள் சிதறுவதையும் குறைத்து பண்ணைகளை சுகாதாரமான முறையில் வைத்திருப்பதன் மூலம் ஈக்களை கட்டுப்படுத்தலாம்.
ஈக்களின் வாழ்க்கை சுழற்சியை தடுக்கும் மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் ஈக்களை கட்டுப்படுத்துதல்
மேலே கூறியதுபோல் ஈக்களின் எண்ணிக்கை பொதுவாக மழை பெய்து சில நாட்கள் கழித்து அதிகமாக காணப்படும். இவ்வாறு அதிகமான எண்ணிக்கையில் காணப்படும் அறிகுறி தென்பட்டவுடன் இந்த வகை மருந்துகளை (சைரோமைசின் 1% மற்றும் 0.01%,0.02% டைபுளுபென்சூரான்) தீவனத்தில் கலந்து கொடுப்பதன் மூலம் ஈக்களை கட்டுப்படுத்தலாம். இவற்றில் சைரோமைசின் 1% பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. இம்மருந்து லார்வாடக்ஸ், லாரிஸ் மற்றும் பிளைபேன் போன்ற பெயர்களில் கிடைக்கின்றது.
சைரோமைசின் 1% மருந்தை 500 கிராம் (0.05%) அளவிற்கு ஒரு டன் தீவனத்தில் கலந்து 6 வாரத்திற்கு தொடர்ந்து கோழிகளுக்கு கொடுக்க வேண்டும். இவை ஈக்களின் புழுப்பருவம் மற்றும் கூட்டுப்புழு பருவத்தில் இறப்பை உண்டாக்குவதால், குறைந்தது 2 முதல் 3 மாதங்கள் வரை ஈக்களின் எண்ணிக்கை பண்ணைகளில் குறைந்து காணப்படும். மீண்டும் ஈக்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது சைரோமைசின் 1% மருந்தை திரும்பவும் 6 வாரத்திற்கு தொடர்ந்து கோழிகளுக்கு கொடுக்க வேண்டும். மேலும், சைரோமைசின் 1% மற்றும் (1%, 0.8% அளவில்) டைபுளுபென்சூரான் மருந்துகளை நேரடியாக கூண்டிற்கு அடியில் குவிந்து கிடக்கும் கோழி எச்சத்தின் மீது தெளிக்கலாம். இவ்வகை மருந்துகளை பயன்படுத்துவதனால் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதை தடுக்கலாம்.
பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி ஈக்களை கட்டுப்படுத்துதல்
பூச்சிக்கொல்லி மருந்துகளை பெரும்பாலும் ஈக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமான எண்ணிக்கையில் காணப்படும்போது மட்டும் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால் அடிக்கடி பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தினால் சுற்றுப்புறச் சூழல் கெடுவது மட்டுமல்லாமல் கொஞ்ச நாட்களிலே ஈக்கள் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கெதிராக எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும். அதன் பிறகு எவ்வளவு மருந்து அடித்தாலும் ஈக்களை கட்டுப்படுத்த முடியாது. மேலும், முட்டை மற்றும் இறைச்சியில் இம்மருந்துகளின் கழிவு இருக்க வாய்ப்புள்ளது. அதனால், பூச்சிக்கொல்லி மருந்தினை ஈக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமான எண்ணிக்கையில் காணப்படும்போது மட்டும் பயன்படுத்த வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்தினை கட்டிடத்தின் சுவர், தரை, எச்சம் மற்றும் கூண்டின் மீது நன்றாக தெளிக்க வேண்டும். ஆனால், கோழிகளின் மீது படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஈக்களின் இனம் புழு பருவம் பொதுவாக எச்சத்தின் அடிப்பாகத்தில், ஈரம் குறைவாக உள்ள இடத்தில் காணப்படும். அதனால் இளம் புழுக்களை அழிப்பதற்கு எச்சத்தை கிளறிவிட்டு தெளிக்க வேண்டும். பொதுவாகக் கடைகளில் கிடைக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள்
1. டெல்டாமெத்திரின் 12.5%
2. சைபர்மெத்திரின் 10%
3. புளுமெத்திரின்
அளவு மற்றும் பயன்படுத்தும் முறை 2 முதல் 2.5மி.லி. மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
4. மாலத்தையான் 57 ஈ.சி - 20 மி.லி. மருந்தை 4.5 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
5. குளோர்பைரிபாஸ்
6. பென்வேலரேட்
மருந்து கலந்த கன்னிகளைப் பயன்படுத்தி முதிர்ந்த ஈக்களை அழித்தல்
முதிர்ந்த ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்போது மித்தேமைல், ஸ்பைனோசேட் மற்றும் கார்ட்ராப் போன்ற வேதி மருந்துகளை வெல்லம் மற்றும் நெல் உமியுடன் சரியான விகிதத்தில் கலந்து கொட்டகையின் உட்புறத்தில் ஆங்காங்கே வைக்க வேண்டும். கொட்டகையின் அளவைப் பொருத்து எண்ணிக்கை மாறுபடும். இந்த மருந்துக்கன்னி ஈக்களை கவர்ந்து அழித்துவிடும்.
பூஞ்சைகள் மற்றும் இயற்கை எதிரிகளை பயன்படுத்தி ஈக்களை கட்டுப்படுத்துதல்
பூச்சியினங்களை அழிக்கும் பூஞ்சைகள் மற்றும் இயற்கை எதிர் உயிரிகளை பயன்படுத்தி கோழிப்பண்ணைகளில் ஈக்களை கட்டுப்படுத்தலாம். ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இந்த பூஞ்சைகளை, ஈக்களை கவரும் தகுந்த பொருள்களுடன் கலந்து பண்ணைகளில் ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்போது வைக்க வேண்டும். இந்த பூஞ்சைகளை பயன்படுத்துவதால் சுற்றுப்புறச் சூழலை பாதிக்காது. மேலும், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு எவ்வித தீங்கும் கிடையாது.
மேலும், ஈக்களை ஏதாவது ஒரு முறையை மட்டும் பயன்படுத்தி அழிப்பது மிகவும் கடினம். அதனால் ஒருங்கிணைந்த கூட்டு பூச்சி கட்டுப்படுத்தும் மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும். அதாவது முதிர்ந்த ஈக்கள் அதிகமாக இருந்தால் பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தி ஈக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். இளம் புழுப்பருவம் எச்சத்தில் அதிகமாக காணப்படும்போது ஈக்களின் வாழ்க்கை சுழற்சியை தடை செய்யும் சைரோமைசின் போன்ற மருந்துகளை பயன்படுத்த வேண்டும். அதே சமயத்தில் பண்ணையின் சுகாதாரத்தை மேம்படுத்தி ஈக்களின் வாழ்க்கை சுழற்சிக்கு உகந்த சூழ்நிலை அமையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.